×

ராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

திருவாடானை, பிப்.7: ராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடியில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் தேர்தல் அறிக்கையில் சேர்த்திட வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியுள்ளதாவது, மத்திய அரசு ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. அதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்க கூடாது. மேலும் இந்த மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனவும், தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5000 மானிய திட்டம் வழங்கப்படுவது போல், தமிழ்நாட்டிலும் வழங்கப்பட வேண்டும்.  விவசாய செலவு அதிகரித்துக் கொண்டே செல்வதால், நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணியை துரிதப்படுத்த வேண்டும். வைகை நீர் வீணாக கடலில் கலக்கிறது. அவற்றை தடுத்து மூன்று பெரிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1500 யூனியன் கண்மாய்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. அவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்து தூர்வார தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானை ஆர்.எஸ்.மங்கலம் மையப் பகுதிகளை கண்டறிந்து அங்கு அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும் என்பது உட்பட 18 கோரிக்கைகளை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

The post ராமநாதபுரம் மாவட்டத்தை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram district ,Thiruvadanai ,Kanimozhi ,Ramanathapuram District Farmers Association Coordination Committee ,Thoothukudi ,Dinakaran ,
× RELATED கலெக்டர் ஆவது லட்சியம்; ராமநாதபுரம்...